அமெரிக்காவில் நிகிதா கொடூர கொலை; காரணம் பற்றி தந்தை கண்ணீர் மல்க பேட்டி

நிகிதாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கையாக கேட்டு கொள்கிறேன் என ஆனந்த் கூறியுள்ளார்.;

Update:2026-01-06 18:42 IST

ஐதராபாத்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் வசித்து வந்த இந்திய இளம்பெண் நிகிதா ராவ் கொதிஷாலா (வயது 27) புத்தாண்டை முன்னிட்டு, காணாமல் போய் விட்டார் என கூறப்படுகிறது. இதுபற்றி முன்னாள் நண்பரான அர்ஜுன் சர்மா (வயது 26) என்பவர் ஹோவர்டு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து இருக்கிறார்.

ஆனால், அதன்பின்னர் அவரை காணவில்லை. அவர் இந்தியாவுக்கு தப்பி விட்டார். அமெரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் தரவு பகுப்பாய்வு பணியில் ஈடுபட்டு வந்த நிகிதா தெலுங்கு பேசும் பெண்ணாவார். இந்நிலையில், கொதிஷாலா கடுமையாக தாக்கப்பட்டு, பல்வேறு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிளாட் ஒன்றில் கிடந்துள்ளார். அது அர்ஜுன் தங்கியிருந்த பிளாட் என தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், கொதிஷாலா படுகொலையில் அர்ஜுனுக்கு தொடர்பு உள்ளது என உறுதி செய்து, சர்வதேச அளவில் அவரை தேட தொடங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் விசாரிக்கப்பட உள்ளது. அவரை நாடு கடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில் கொதிஷாலா, பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து ஆல்-இன் விருது வாங்கினார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி நிகிதாவின் தந்தை ஆனந்த் கொதிஷாலா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, 4 ஆண்டுகளுக்கு முன் நிகிதா கொலம்பியாவுக்கு சென்றாள். அவள் வேலை செய்து வந்தாள் என்றார். அர்ஜுன், நிகிதாவின் அறையில் தங்கியிருந்த முன்னாள் நண்பர். அவர் காதலர் எல்லாம் கிடையாது என்றார்.

அர்ஜுனுக்கு, அவ்வப்போது நிகிதா கடனாக பணம் கொடுத்திருக்கிறார். 4,500 அமெரிக்க டாலர்களில் 3,500 அமெரிக்க டாலர்களை அர்ஜுனிடம் இருந்து நிகிதா திருப்பி வாங்கிய நிலையில், மீதமுள்ள தொகையை வாங்க அர்ஜுனின் பிளாட்டுக்கு சென்ற இடத்தில் படுகொலை நடந்துள்ளது.

இந்தியாவுக்கு செல்லும் முன் இந்த கொலையை செய்து விட்டு தப்பியுள்ளான் என கூறியுள்ளார். நிகிதாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கையாக கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்