தெலுங்கானாவில் மரச்சாமான் கடையில் தீ விபத்து; 5 பேர் பலி
தெலுங்கானாவில் தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி கிடைக்க வழி செய்யப்படும் என மந்திரி பொன்னம் பிரபாகர் கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
தெலுங்கானாவில் நம்பள்ளி மாவட்டத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் சிக்கி கொண்டனர். இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்க முயன்றனர். எனினும், இரவு நேரத்தில் தீயை அணைக்க கடுமையாக போராட வேண்டியிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9.15 மணியளவில் பலியான ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என தெலுங்கானா தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவின் இயக்குநர் ஜெனரல் விக்ரம் சிங் இன்று மதியம் கூறினார்.
இந்த தீ விபத்து பற்றி குறிப்பிட்ட அவர், வாகனங்கள் நிறுத்துவதற்காக இருந்த இடத்தில் தொழிலாளர்களை தங்க வைத்து உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டபோது, சக தொழிலாளர்களை காப்பாற்ற அவர்களில் 2 பேர் சென்றனர். இதில் அவர்களும் சிக்கி கொண்டனர்.
கட்டிடத்தின் தரை தளத்தில் தொழிலாளர்களுக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டு உள்ளது. அந்த தளத்தில் உடனே வெடித்து சிதற கூடிய பொருட்கள் உள்பட பல பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதனால், மீட்பு குழுவினர் மற்றும் தீ வீரர்களால் உடனே உள்ளே செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது.
எனினும், நாங்கள் தீயை அணைத்து, அவர்களின் உடல்களை மீட்டுள்ளோம் என்றார். அலட்சியம் சார்ந்த குற்றம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி கிடைக்க வழி செய்யப்படும் என தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் கூறியுள்ளார்.