வாக்கு திருட்டு; தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
பா.ஜனதா தோல்வியடையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.;
புதுடெல்லி,
தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டு சதியின் முக்கிய பங்காளியாக இருப்பதாகவும், அது இனி ஜனநாயகத்தின் பாதுகாவலர் இல்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கெல்லாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் வாக்கு திருட்டு நடக்கிறது. குஜராத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் நடைபெறுவது எந்த வகையான நிர்வாக செயல்முறையும் அல்ல. அது நன்கு திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் மூலோபாயமான வாக்கு திருட்டு. இதில் மிகவும் அதிர்ச்சியும், ஆபத்தான அம்சம் எதுவென்றால், ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படடன.
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் இருந்து கணிசமான வாக்குகள் நீக்கப்பட்டன. பா.ஜனதா தோல்வியடையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.மிகவும் தீவிரமான உண்மை என்னவென்றால், தேர்தல் கமிஷன் இனி ஜனநாயகத்தின் பாதுகாவலர் அல்ல, மாறாக இந்த வாக்கு திருட்டு சதியில் முக்கிய பங்காளியாக மாறி உள்ளது,
‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற அரசியலமைப்பு உரிமையை அழிக்கும் ஆயுதமாக வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் அல்ல, பா.ஜனதா தீர்மானிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.