இந்திய ஆறுகளில் 6 ஆயிரத்து 300 டால்பின்கள் - ஆய்வில் தகவல்
இந்திய ஆறுகளில் 6 ஆயிரத்து 300 டால்பின்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.;
டெல்லி,
இந்திய ஆறுகளில் உள்ள டால்பின்களை கணக்கெடுக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி 2020 ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளில் வாழும் டால்பின்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி, 2021 முத்ல 2023 வரை நாட்டின் 8 மாநிலங்களில் உள்ள 58 ஆறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உத்தரபிரதேசம், பீகார், ஜாக்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள ஆறுகளில் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 300 டால்பின்கள் உள்ளது தெரியவந்துள்ளது. கங்கா, பிரம்மபுத்திரா, இந்தோஸ் ஆறுகள் அமைப்பில் மொத்தம் 6 ஆயிரத்து 327 டால்பின்கள் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆழமான ஆறுகள், குறைந்த மனித இடையூறுகள் உள்ள ஆற்றுப்பகுதிகளில் டால்பின்கள் அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய ஆறுகளில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கை குறித்து நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.