ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த ஜெகதீப் தன்கர்
முன்னாள் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.;
கோப்புப்படம்
ஜெய்ப்பூர்,
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள கிஷன்கர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதற்காக அவர் 2019-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வூதியம் பெற்று வந்தார்.
அதன் பிறகு அவர் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுதது எம்.எல்.ஏ. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக இருந்த அவர் மீது, உரிய நேரம் தரமறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு வைத்தன.
ஆனால் திடீரென்று கடந்த ஜூலை 21-ந் தேதி ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பின்னணியில் பா.ஜனதாவின் அழுத்தம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கொடுத்த கடிதத்தை பெற்றது பா.ஜனதா தலைவர்களை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்பட்டது. ராஜினாமா செய்த பின்னர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை சுற்றி இவ்வளவு அரசியல் பரபரப்பு நடந்து வரும் நிலையில், ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் கேட்டு, ராஜஸ்தான் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் ஓய்வூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது 74 வயதாகும் ஜெகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே அவர் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் எம்.பி. மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ. என 3 ஓய்வூதியங்களுக்கு தகுதியுடையவர்.
மேற்கு வங்காள முன்னாள் கவர்னரான ஜெகதீப் தன்கருக்கு ஓய்வூதிய சலுகைகள் எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் திருப்பிச் செலுத்தும் ஒரு செயலக ஊழியரைப் பெறலாம். ஒரு முறை எம்.பி.யாக இருந்ததால், பிற சலுகைகளுக்கு கூடுதலாக மாதத்திற்கு ரூ.45,000 ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு.
முன்னாள் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கருக்கு, மாதந்தோறும் சுமார் ரூ.2 லட்சம் ஓய்வூதியம், ஒரு பங்களா, ஒரு தனிச்செயலாளர், ஒரு கூடுதல் தனிச்செயலாளர், ஒரு உதவியாளர், ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் 4 தனி உதவியாளர்கள் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.