எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி? என என்னிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்: ஜே.பி. நட்டா

அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க போகிறீர்கள் என கார்கேவை நோக்கி ஜே.பி. நட்டா கூறினார்.;

Update:2025-08-05 15:42 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடியும் அதுபற்றி அவையில் விளக்கம் அளித்து பேசினார். இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த அவை தலைவரான ஜே.பி. நட்டா இடையே இன்று கடுமையான விவாதம் ஏற்பட்டது.

அவையில் கார்கே பேசும்போது, உறுப்பினர்கள் தங்களுடைய போராட்டத்திற்கான ஜனநாயக உரிமையை மேற்கொண்டிருந்தபோது, சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் அவையின் மைய பகுதிக்கு வருவது என்பது எங்களுக்கு அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நேற்று அவர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்தனர். இன்றும் வந்துள்ளனர்.

இந்தளவுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் கீழிறங்கி விட்டனவா? இது ஆட்சேபனைக்குரியது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார். எனினும், அவையின் துணை தலைவரான ஹரிவன்ஷ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர்கள் சி.ஐ.எஸ்.எப். (மத்திய தொழில் பாதுகாப்பு படை) அதிகாரிகள் இல்லை என்றும் அவர்கள் நாடாளுமன்ற பாதுகாவலர்களே என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஜே.பி. நட்டா, அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல என நீங்களே தெளிவுப்படுத்தி விட்டீர்கள். நான் பேசி கொண்டிருக்கும்போது, சிலர் எனதருகே வந்து கோஷம் எழுப்புவது என்பதும் ஜனநாயகம் அல்ல. அவை சீராக நடப்பதற்கான வழி இதுவல்ல.

நான் நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கிறேன். அதனால், எதிர்க்கட்சி எப்படி பணியாற்ற வேண்டும் என என்னிடம் கற்று கொள்ளுங்கள் என நான் கூற முடியும். ஏனெனில், அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க போகிறீர்கள் என்றார்.

அவையில், பேச உரிமை கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினருக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக சீட்டில் இருந்து எப்போது அவர்கள் எழுந்திருக்கிறார்களோ அந்த கணமே, அவர்களுடைய ஜனநாயக சிந்தனை முடிவுக்கு வந்து விடுகிறது என கூறிய நட்டா, இது ஜனநாயகமற்ற ஒன்று என்பது மட்டுமில்லாமல், சர்வாதிகார போக்கை தோற்றுவிக்கும் முயற்சியும் ஆகும் என்றும் அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்