"நான் தூக்கிலிடப்பட வேண்டும்.." - டென்னிஸ் வீராங்கனையை கொலை செய்த தந்தை கதறல்
டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்பது குறித்து, அவருடைய தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.;
குருகிராம்,
டெல்லியை அடுத்துள்ள அரியானா மாநில பகுதியான குருகிராமில் வசதி படைத்தவர்கள் வசிக்கும் செக்டார் 57-ல் உள்ள சுஷாந்த் லோக் பகுதியில் இரண்டு மாடி வீடு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தீபக் யாதவ் (வயது 49). இருடைய மனைவி மஞ்சு, மகள் ராதிகா யாதவ் (25), மகன் தீரஜ். இதில் மகள் டென்னிஸ் வீராங்கனையாக இருந்தார்.
முன்னாள் வங்கி ஒன்றில் ஊழியரான தீபக் யாதவ், தனது சொந்த கிராமமான வஜிராபாத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு சொத்துகளும் ஏராளமாக உள்ளன.
ராதிகா யாதவ் கடந்த 10-ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தபோது, தீபக் யாதவ் தனது கைத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் சரிவர தெரியாத நிலையில் பல்வேறு தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன.
இந்தநிலையில் தீபக் யாதவை, போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக கொடுத்தார்.
அதன் விவரம் வருமாறு:-
வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த தீபக் யாதவ், நல்ல வசதி படைத்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஆனாலும் தனது சொந்த கிராமமான வஜிராபாத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். அத்துடன் அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் இருந்து வாடகை மூலம் மாதந்தோறும் ரூ.17 லட்சம் வருமானம் வந்தது.
ஆனால் சொந்த ஊரில் உள்ளவர்கள், அவருடைய உறவினர்கள் மகளின் வருமானத்தில் தீபக் யாதவ் ஆடம்பரமாக வாழ்வதாக கேலி செய்தனர். மேலும் ராதிகாவின் நடத்தை குறித்தும் கேள்வி எழுப்பினர். இதனால் தீபக் ஆத்திரம் அடைந்தார்.
எனக்கே மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. எனவே மகளின் வருமானத்தில் வாழ்க்கை நடத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவளின் வெற்றியை நம்பிதான் வாழ்கிறேன் என்று பலமுறை கூறியுள்ளார்.
ராதிகாவுக்கு சிறுவயது முதலே டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், மகளை மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனையாக்க வேண்டும் என்று தீபக் யாதவ் விரும்பினார். மகளை டென்னிஸ் விளையாட்டில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுவர ரூ.2 கோடி வரை செலவு செய்துள்ளார்.
அவரது ஒத்துழைப்பால் ராதிகாவும் விளையாட்டில் பல வெற்றிகளை குவித்ததுடன், அரியானா மாநிலத்துக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். சமீபத்தில் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.
இதையடுத்தே மற்றவர்களுக்கு டென்னிஸ் பயிற்சி வகுப்பை நடத்தி வந்தார். இதற்காக பல்வேறு டென்னிஸ் மைதானங்களை வாடகைக்கு முன்பதிவு செய்து, அதில் பயிற்சி நடத்தி வந்தார். அவர் சொந்தமாக பயிற்சி அகாடமி நடத்தவில்லை.
மகளின் இந்த செயல் தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே உறவினர்கள் கேலிப்பேச்சால் மனம் உடைந்து இருந்த தீபக் யாதவுக்கு, ராதிகா இதுபோன்று பயிற்சி நடத்துவது பிடிக்கவில்லை. அதனை விட்டுவிடுமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் ராதிகா அதை கேட்கவில்லை.
இதனால் தந்தை-மகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு நடந்துள்ளது. இந்தநிலையில்தான் மகளை தீபக் யாதவ், தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இவ்வாறு போலீசாரிடம், தீபக் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே ராதிகா யாதவின் கொலைக்கு, காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்த ராதிகா யாதவ், சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
அப்போது அவருக்கும், யூடியூப் பிரபலம் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்ததை பார்த்த பலர், 'ஜோடிப்பொருத்தம் சூப்பர்' என்று வர்ணித்தனர்.
இதனால் ராதிகா, அந்த யூடியூப் பிரபலத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தீபக் யாதவுக்கு ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை. மேலும் சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருக்குமாறு மகளை அவர் கூறிவந்தார். எனவே கொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது.
அதே நேரம் இந்த கருத்தை தீபக்கின் உறவினர்கள் மறுத்துள்ளனர். அந்த இசை ஆல்பம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது. ராதிகாவுக்கும் அப்படி ஒரு காதல் இருக்கவில்லை என்று தெரிவித்தனர். அதுபற்றியும் தீபக் யாதவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு தகவல்கள் உலவிக்கொண்டு இருக்கும் சூழலில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தீபக்கை, சொந்த கிராமத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அவரிடம் ஒருநாள் விசாரணை முடிவடைந்ததால் மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தீபக் யாதவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில் , குற்றம் சாட்டப்பட்ட தீபக், தான் ஒரு பெரிய பாவம் செய்துவிட்டதாக தன்னிடம் கூறியதாகவும், தனது மகளைப் பற்றி அவர் பெருமைப்படுவதாகவும், ஆனால் சிலரின் சில கருத்துக்களைக் கையாள முடியவில்லை என்றும் தான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் கூறியதாகவும் அவர் தெரிவித்ததாக கூறினார்.