பீகார் தேர்தல் நியாயமாக நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தூக்கி எறியப்படும் - பிரியங்கா காந்தி
பீகாரில் கடந்த மூன்று ஆண்டுகளில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 6-ந்தேதி(இன்று) 121 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதே போல் 'மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் மோதிஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மதத்தின் பெயரால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பா.ஜ.க. தலைவர்கள் மக்களை வலியுறுத்துகிறார்களே தவிர, வளர்ச்சிக்காக அல்ல. இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்தால், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தூக்கி எறியப்படும்.
பீகார் மக்கள் இந்த அரசாங்கத்தை வேரோடு பிடுங்கி, ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக பாடுபடும் ஒரு அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள். மாநிலத்தில் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.