மேற்கு வங்காளம் வேண்டும் என விரும்பினால்... அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி பகிரங்க சவால்

எஸ்.ஐ.ஆர். பணிகளுடன் தொடர்புடைய தரவுகளை அமலாக்க துறையினர் கைப்பற்றி கொண்டு சென்று விட்டனர் என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.;

Update:2026-01-08 19:35 IST

கொல்கத்தா,

நாட்டில் தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையொட்டி எஸ்.ஐ.ஆர். பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரசுக்கு தேர்தல் வியூக யுக்திகளை வகுத்து கொடுக்கும் ஐ-பேக் நிறுவனம் அமைந்துள்ள கொல்கத்தா அலுவலகத்தில் அமலாக்க துறை இன்று அதிரடியாக சோதனை செய்தது.

இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக மம்தா பானர்ஜி அந்த அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அமலாக்க துறையின் சோதனையை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்காளம் வேண்டும் என அமித்ஷா விரும்பினால், அவர் மாநிலத்திற்கு வந்து ஜனநாயக முறையில் போராடி, வெற்றி பெறட்டும்.

என்ன வகையான சோதனை நடக்கிறது என ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் சோதனை காலை 6 மணிக்கு தொடங்கியது.

அவர்கள் வந்து, கட்சியின் தரவுகள், லேப்டாப்புகள், செயல்திட்டங்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி கொண்டனர். அவர்களுடைய தடய அறிவியல் நிபுணர்கள், எல்லா தரவுகளையும் அவர்கள் தரப்புக்கு மாற்றி விட்டனர். இது ஒரு குற்றம் என்றே நான் நம்புகிறேன் என கூறினார்.

ஐ-பேக் ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசுக்கு வேலை பார்க்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். வாக்காளர் பட்டியலுக்கான எஸ்.ஐ.ஆர். பணிகளுடன் தொடர்புடைய தரவுகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டு சென்று விட்டனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக பதிவு செய்யப்பட்டது எங்களுடைய கட்சி. வருமானவரியை ஒழுங்காக சமர்ப்பித்து வருகிறோம். அமலாக்க துறைக்கு ஏதேனும் தகவல் தேவையென்றால், அதனை வருமானவரி துறையிடம் இருந்து பெற்று கொள்ளலாம். எங்களுடைய கட்சியின் ஐ.டி. துறையில் சோதனை நடத்துவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்