2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது: பிரதமர் மோடி
இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள் நடத்த முடிவாகி உள்ளன.;
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வழியே கலந்து கொண்டு இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் 2036-ம் ஆண்டு நடைபெற கூடிய ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது என்றார். கடந்த தசாப்தத்தில், பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை, ஆக்கி உலகக்கோப்பை மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்துள்ளன.
இதனை நீங்கள் கவனித்திருக்கலாம். 2030 காமன்வெல்த் போட்டிகளும் இந்தியாவில் நடத்த முடிவாகி உள்ளன. தற்போது இந்தியா, 2036 ஒலிம்பிக் போட்டிகளை எடுத்து நடத்த முழு வீச்சில் தயாராகி வருகிறது என்றார்.
2036 கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை, ரூ.34,700 கோடி முதல் ரூ.64 ஆயிரம் கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டு உதவியுடன் ஆமதாபாத் நகரில் நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இரட்டை நகர வளர்ச்சியுடன் காந்திநகரையும் சேர்த்து உள்ளடக்கிய இந்த திட்டத்தின்படி, உலக தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.