விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமா? தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பதில்

கரூர் வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின் போது விஜய்க்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-12-31 14:35 IST

புதுடெல்லி,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். இதுபோலவே கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் 9 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது. காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வந்த அவர்களிடம் 11.30 மணி அளவில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்து மாலை வரை நீண்டது. விசாரணை முடிந்து அவர்கள் மாலை 6.45 மணி அளவில் வெளியே வந்தனர். நேற்று மட்டும் அவர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

3-வது நாளாக இன்று த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த இரு நாட்களாக மாலை வரை விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று பிற்பகலுக்கு முன்பே விசாரணை முடிந்தது. தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக அதிகாரிகள் கூறியதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் த.வெ.க. நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இதற்கிடையே கரூர் வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின் போது விஜய்க்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்தில் விஜய்க்கு சம்மன் அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக நேரடியாக பதிலளிக்க த.வெ.க. நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சிடிஆர் நிர்மல் குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிறைய தகவல்கள் பரவி வருகின்றன. யூகங்களின் அடிப்படையில் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்கள் சட்டப்பூர்வமாக பதிலளிப்போம்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்