ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகையா? மத்திய மந்திரி அளித்த பதில்

குடிமக்கள் அல்லது பயணிகள், குறைந்த அளவிலான கட்டணம் செலுத்தி பயணம் செய்ய கூடிய வசதியை இந்தியா வழங்கி வருகிறது என கூறினார்.;

Update:2025-12-10 16:41 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தின் கேள்வி ஒன்றிற்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்ததுபோன்று, மூத்த குடிமக்களுக்கு ரெயில் டிக்கெட்டில் சலுகைகள் வழங்கும் திட்டம் எதுவும் உண்டா? என்பது பற்றிய அவருடைய கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி வைஷ்ணவ், வளர்ச்சியடைந்த நாடுகளில் வசூல் செய்யப்படும் டிக்கெட் கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கே இந்தியாவில் ரெயில்வே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.

நம்முடைய அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டால் கூட மிக மிக குறைவான அளவிலேயே நம் நாட்டில் டிக்கெட் கட்டணம் உள்ளது என்றார். கடந்த ஆண்டு, இந்திய ரெயில்வே ரூ.60 ஆயிரம் கோடி மானியம் வழங்கியது. இதனால், குறைந்த கட்டணம் செலுத்தி செல்ல கூடிய அளவில் பயணிகளின் போக்குவரத்து அமைந்திருந்தது என்றார்.

நம்முடைய குடிமக்கள் அல்லது பயணிகள், குறைந்த அளவிலான கட்டணம் செலுத்தி பயணம் செய்ய கூடிய வசதியை இந்தியா வழங்கி வருகிறது என கூறினார். இதனால், ஏற்கனவே குறைந்த கட்டண தொகையே வசூலிக்கப்படுகிறது என்ற ரீதியில் பதிலளித்த அவர், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்