அதானி மகன் திருமணத்தில் மன்னர் சார்லஸ், போப் பங்கேற்பா... உண்மை என்ன?

குஜராத்தில் ஜீத் அதானிக்கும் மற்றும் பிரபல வைர வியாபாரி ஜியாமின் ஷாவின் மகளான திவா ஷாவுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது.;

Update:2025-01-22 04:38 IST

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அதானியின் மனைவி பிரீத்தி அதானி, மகன்கள் கரண் மற்றும் ஜீத், மருமகள் பரிதி மற்றும் பேத்தி காவேரி ஆகியோரும் வந்திருந்தனர்.

தினசரி ஒரு லட்சம் இலவச உணவு வழங்குவதற்கு ஆதரவாக அதானி நிதியுதவி செய்து வருகிறார். இதேபோன்று, 1 கோடி இறைவணக்க புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.

அப்போது அதானியிடம், அவருடைய மகனின் திருமணம் பிரபலங்கள் பங்கு பெறும் கொண்டாட்டங்கள் நிறைந்த மகா கும்பமேளாவாக இருக்க போகின்றதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அதானி, நிச்சயம் இல்லை என மறுத்துள்ளார். அவருடைய மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7-ந்தேதி நடைபெறும் என கூறினார். அதானி தொடர்ந்து கூறும்போது, எங்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் பொதுஜனங்களை போன்றே இருக்கும். ஜீத்தின் திருமணம் மிக எளிமையாக, முழு பாரம்பரிய வழிகளிலேயே இருக்கும் என்றார்.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில், ஜீத் அதானிக்கும் மற்றும் சூரத் நகரின் பிரபல வைர வியாபாரியான ஜியாமின் ஷாவின் மகளான திவா ஷாவுக்கும் இடையே திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக, சமூக ஊடகத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உலகளவிலான நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள், இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல் பரவின. திருமண விருந்தினர்களாக எலான் மஸ்க், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பர்க், டேனியல் கிரெய்க், டெய்லர் ஸ்விப்ட், ஜஸ்டின் பீபர், கன்யே வெஸ்ட், கர்தேஷியன் சகோதரிகள், ரபேல் நடால், தில்ஜித் தோசன்ஜ், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, பில்லி எலிஷ், கோல்ட்ப்ளே மற்றும் கிங் சார்லஸ் மற்றும் போப் கூட கலந்து கொள்வார்கள் என செய்திகள் பரவின.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டி கூட திருமண நிகழ்வுக்காக, மோதேரா ஸ்டேடியத்தில் இருந்து மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. இதில், ஆயிரம் சூப்பர் கார்கள், நூற்றுக்கணக்கான தனியார் விமானங்கள் மற்றும் 58 நாடுகளை சேர்ந்த சமையல் கலை நிபுணர்கள் என ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த செய்திகளுக்கு எல்லாம் மறுப்பு தெரிவிக்கும் வகையில் அதானியின் பதில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்