மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்க மாநில அரசு அனுமதி

மது கடைகள், நடன பார்கள், பப் போன்றவைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-04 07:21 IST

மும்பை,

மராட்டியத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடைகள், ஓட்டல்கள் செயல்படுவதை போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தடுத்து வருவதாக வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள், வணிக சங்கங்கள் மாநில அரசிடம் புகார்கள் தெரிவித்து இருந்தனர். இதனைத்தொடர்ந்து மாநில அரசு மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2017-ன் விதிகளை மேற்கோள் காட்டி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், ரெஸ்டாரண்ட், தியேட்டர்கள், பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம். இதில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் திறந்து இருக்கலாம். ஆனால் மது கடைகள், பீர் பார்கள், நடன பார்கள், ஹூக்கா பார்லர்கள், பப் போன்றவைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி இல்லை. மாநில அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கால வரம்புக்குள் மட்டுமே தொடர்ந்து செயல்பட வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து இருப்பதற்கு வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் உத்தரவை மேற்கு இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட சங்கம் வரவேற்று உள்ளது. அந்த சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அரசின் இந்த முடிவு வியாபார நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துதலாக அமையும். உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக மும்பை நகரம் உண்மையிலேயே சர்வதேச நகரமாக மாறும். வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்ட முடிவு இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே உத்தவ் சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதைத் தான் நான் முன்பு கூறினேன். அப்போது மாநிலத்தின் கலாசாரம், பாதுகாப்பை காரணம் காட்டி பா.ஜனதாவினர் எதிர்த்தனர். இப்போது நமது கலாசாரம் என்ன ஆனது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்