இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வெளியிட்டவர் கைது
பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.;
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், தனது எக்ஸ் தளம் மூலம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் இன்ஸ்டாகிராமில் தன்னை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய பனசங்கரி போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருதீப் சிங் (வயது 26) என்பதும், ஓட்டல் நிர்வாக படிப்பு படித்திருப்பதும் தெரிந்தது. மேலும் கே.ஆர்.புரத்தில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வரும் இவர், எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு பகுதிகளுக்கு சென்று இளம்பெண்களை புகைப்படம், வீடியோ எடுப்பார். பின்னர் அதனை ஆபாசமாக சித்தரித்து ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்துள்ளார்.
இளம்பெண்களை, பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதை குருதீப்சிங் வாடிக்கையாக வைத்திருந்தார். இன்ஸ்டாகிராமில் குருதீப் சிங்கை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதால், அவர்களுக்காக இதுபோன்று இளம்பெண்களை புகைப்படம், வீடியோ எடுத்து ஆபாசமாக சித்தரித்தது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.