உயிரிழந்த சிசுவை கலெக்டர் அலுவலகத்திற்கு பையில் கொண்டுவந்த தந்தை - அதிர்ச்சி சம்பவம்
ரூபியை மஹிவாகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் நவ்சர் ஜோகி கிராமத்தை சேர்ந்தவர் விபின். இவரது மனைவி ரூபி. நிறைமாத கர்ப்பிணியான ரூபிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ரூபியை மஹிவாகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், ரூபிக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்த நிலையில் அவருக்கு உயிரிழந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. மனைவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாக விபின் குற்றஞ்சாட்டினார். மேலும், உயிரிழந்த சிசுவை பையில் எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர், மருத்துவ அதிகாரிகளிடம் தனியார் மருத்துவமனை அதிக பணம் செலுத்தக்கோரி சிகிச்சையை தாமதப்படுத்தியதாக விபின் குற்றஞ்சாட்டினார். டாக்டர்கள் அலட்சியத்தால் தனது குழந்தை உயிரிழந்ததாகவும், பையில் கொண்டுவந்த சிசுவை காட்டினார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விபினிடமிருந்து சிசிவை கைப்பற்றினர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும், விபினின் மனைவி ரூபி உள்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றினர். மேலும், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.