கல்லூரி மாணவியின் கண்களில் மிளகாய் பொடி தூவி குத்திக்கொன்ற வாலிபர் - பெங்களூருவில் பயங்கரம்

முன்பு ஒருமுறை யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றதாக கூறப்படுகிறது.;

Update:2025-10-17 06:52 IST

பெங்களூரு,

பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுதந்திர பாளையாவில் வசித்து வருபவர் கோபால். இவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா படவேடு கிராமம் ஆகும். இவரது மகள் யாமினி பிரியா (வயது 20). இவர், பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். நேற்று காலையில் யாமினி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். கல்லூரியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு மதியம் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

மதியம் 2 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள மந்திரி வணிகவளாகம் பின்னால் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே யாமினி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், யாமினியை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது. பின்னர் தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்ணில் வாலிபர் வீசினார். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் யாமினி துடிதுடித்தார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாமினியின் கழுத்தில் சரமாரியாக வாலிபர் குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த யாமினி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவி யாமினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், யாமினியை, சுதந்திர பாளையாவை சேர்ந்த விக்னேஷ் தான் கொலை செய்தது தெரியவந்தது. யாமினியை, விக்னேஷ் காதலித்துள்ளார். ஆனால் விக்னேசின் காதலை ஏற்க யாமினி மறுத்து விட்டார். ஆனாலும் அவரை பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு முன்பு ஒரு முறை யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்த விக்னேஷ், கல்லூரி முடிந்து யாமினி வீட்டுக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருந்து, படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான விக்னேசை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்