2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மிசார்பூர் மாவட்டம் செம்ரி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசந்திரா. இவரது மனைவி சங்கீதா (வயது 35) இந்த தம்பதிக்கு சிவாஸ் (வயது 3), சுபன்கர் (வயது 1) என 2 குழந்தைகள் இருந்தன.
இந்நிலையில், சங்கீதா நேற்று மாலை தனது 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலைக்கு சென்ற ஹரிசந்திரா மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி, குழந்தைகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட சங்கீதா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.