கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. அரசு மருத்துவமனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்

கொல்கத்தாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக அரசு மருத்துவமனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.;

Update:2025-10-24 03:51 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரின் பவானிபூர் பகுதியில் எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு முதுநிலை மருத்துவ படிப்பு கற்பிக்கப்படுகிறது. மருத்துவமனையும் இணைந்து செயல்படுகிறது.

நேற்று முன்தினம் பகலில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர்களுடன் அவர்களது 13 வயது மகளும் வந்திருந்தாள். பெற்றோர் சிகிச்சைக்காக வரிசையில் நின்றபோது சிறுமி அருகில் இருக்கையில் காத்திருந்தாள். அப்போது அங்கு வந்த ஒருவர், இங்கு யாரும் அமரக்கூடாது என்று சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்ற அவர், சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அழுதுகொண்டே வந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம், நடந்த சம்பவம் பற்றி கூறினார். உடனே அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு, அங்குள்ள கேமரா காட்சிகளின் உதவியுடன், அந்த நபர் யார் என்று பாார்த்தனர். அப்போது அந்த நபர் மருத்துவமனையில் இதற்கு முன்பு வார்டு பாயாக வேலை பார்த்த அமித் மாலிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அமித் மாலிக்கை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு முதுகலை பயிற்சி டாக்டர் ஒருவர் மருத்துவமனையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஜூன் மாதம் சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் மீண்டும் கொல்கத்தாவை உலுக்கியது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்