பைக்கின் பின்னால் மனைவியின் உடலை கட்டி எடுத்துச்சென்ற வாலிபர்: நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி வாலிபர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் குமாரி சுங்கச்சாவடி அருகில் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் வாலிபர் ஒருவர், பெண்ணின் உடலை கட்டி வைத்து சர்வசாதாரணமாக சென்று கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அங்கு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆனால் வாலிபர் நிற்காமல் சென்றார்.
இதையடுத்து போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்று வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பெண்ணின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாக்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. நாக்பூர் அருகே உள்ள லோனாரா பகுதியில் வசித்து வருபவர் அமித் பும்ரா யாதவ் (வயது35). இவர் கடந்த 9-ந்தேதி மனைவி கியார்ஷியுடன் (34) மோட்டார் சைக்கிளில் மத்திய பிரதேசம் மாநிலம் சியோனியில் உள்ள சொந்த ஊரான கரன்பூருக்கு சென்றார்.
மாலை 3 மணியளவில் நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி வாலிபரின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் பின்னால் இருந்த கியார்ஷி தவறி விழுந்தார். அப்போது லாரி அவரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த பகுதி வனப்பகுதியில் இருந்ததால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஒரு சில வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று உள்ளது. மனைவி விபத்தில் உயிரிழந்ததால் செய்வதறியாது நின்ற வாலிபர் உதவி கேட்டு அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தினார். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தி உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த வாலிபர், மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி கொண்டு வீட்டுக்கு எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை தேடிவருகின்றனர். இதற்கிடையே வாலிபர் மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்து வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.