நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட நபர் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 'போலீஸ் இன்பார்மர்' என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நக்சலைட்டுகள் அவரை கொலை செய்துள்ளனர்.;
ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, அம்மாநிலத்தின் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி என்கவுன்டரில் 17 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பிஜாபூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் ஹாலூர் கிராமத்தை சேர்ந்த 48 வயதான சுக்கு ஹப்கா (வயது 48) என்ற நபரை நேற்று இரவு நக்சலைட்டுகள் கடத்தி சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் இன்று காலை அக்கிராமத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சுக்கு ஹாப்காவின் உடல் மீட்கப்பட்டது. சுக்கு ஹப்கா 'போலீஸ் இன்பார்மராக' செயல்பட்டதாக நக்சலைட்டுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நக்சலைட்டுகள் அவரை கடத்தி கொலை செய்துள்ளனர். ஹப்காவின் சாலம் மீட்கப்பட்ட பகுதியில் நக்சலைட்டுகளின் போஸ்டர்கள் கிடந்தன. அந்த போஸ்டரில் ஹாப்கா போலீஸ் இன்பார்மராக செயல்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுக்கு ஹாப்காவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.