ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ராவுக்கு ராணுவத்தில் உயரிய பதவி - ராஜ்நாத் சிங் பாராட்டு
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் மேலும் ஒரு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.;
புதுடெல்லி,
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்தவர். உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் மகுடம் சூடியிருக்கிறார். இந்த சீசனில் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து புதிய அத்தியாயம் படைத்தார். அரியானாவைச் சேர்ந்த 27 வயதான நீரஜ் சோப்ரா 2016-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு சுபேதர் மேஜராக பதவி உயர்வு பெற்றார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் மேலும் ஒரு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு ‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற பதவியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கினார்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசத்தின் பெருமை ஆகிய உயர்ந்த பண்புகளின் அடையாளமாக திகழ்கிறார். விளையாட்டு சமூகம் மற்றும் ஆயுதப்படையினருக்கு தலைமுறை தலைமுறையாக உத்வேகம் அளிக்கும் சேவையை செய்கிறார்’ என்று பாராட்டினார். நிகழ்ச்சியில் ராணுவத்தளபதி உபேந்திர திவேதி மற்றும் மூத்த அதிகாரிகள், சோப்ராவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார்.