திருமணமான 3 மாதத்தில் கணவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்ற புதுப்பெண்
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் (மாவட்டம்) அருகே சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் தாதப்பா (வயது 29). கூலி தொழிலாளி. இவரது மனைவி கந்தம்மா (27). இவர் யாதகிரி மாவட்டம் வடகெரே கிராமத்தை சேர்ந்தவர். இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை தம்பதி ராய்ச்சூர் புறநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆற்றுக்கு சென்று இயற்கை காட்சியை கண்டு ரசித்தனர். மேலும் ஆற்றுப்பாலத்தில் நின்று செல்பி எடுத்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக புகைப்படம் எடுக்க முடிவு செய்தனர். முதலில் கந்தம்மா ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் நின்று புகைப்படம் எடுத்தார். பின்னர் தாதப்பாவை ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி நிற்கும்படி கந்தம்மா கூறினார்.
அதன்படி அவரும் தடுப்புச்சுவரில் ஏறி நின்றார். அப்போது தாதப்பாவை கந்தம்மா திடீரென்று ஆற்றுக்குள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் ஆற்றுக்குள் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீச்சல் அடித்து நடு ஆற்றில் இருந்த பாறையில் தஞ்சம் அடைந்தார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கிருந்து அவரால் கரைக்கு வர முடியவில்லை. அவர் நடுஆற்றில் தத்தளித்தார்.
மேலும் காப்பாற்றும்படி கூறினார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் அவரை மீட்டனர். அவர்களிடம் கந்தம்மா, தனது கணவர் புகைப்படம் எடுக்க முயன்றபோது கால்தவறி ஆற்றில் விழுந்ததாக கூறினார். இதை கேட்ட தாதப்பா மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
'என்னை ஆற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்றுவிட்டு, இப்படி கூறுகிறாயே' என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு கந்தம்மா பொதுமக்களிடம் நான் கணவரை தள்ளவில்லை. புகைப்படம் எடுக்கும்போது கால்தவறி அவரே விழுந்துவிட்டு என் மீது குற்றம்சாட்டுகிறார் என்று கூறினார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தம்பதியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது தாதப்பா மனைவி தன்னை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றதாக புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், எதற்காக கணவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.