சாக்குப் போக்குகள் தேவை இல்லை: தேர்தல் ஆணையத்தை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கர்நாடகம், அரியானா மற்றும் மராட்டிய மாநில தேர்தல்களில், பா.ஜனதா கட்சி வாக்குகளை திருடியதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, குற்றம் சாட்டினார். மிகப்பெரிய அளவில் வாக்குத்திருட்டு நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்களை முன் வைப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடகத்தின் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டன என கூறினார். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக உள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசியதாவது:-
"வாக்காளர் பட்டியல் சீராய்வு தேவை என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது. எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. பிறகு, எப்படி அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்?. வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பை அவமதிக்கின்றன. சிலர் இரட்டை வாக்களிப்பு நடந்ததாகக் கூறினர். ஆதாரம் கேட்டபோது எந்தப் பதிலும் இல்லை. தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. அனைவரும் சமம். சில கட்சிகள் குழப்பத்தை உருவாக்கி வருகின்றன என்று கூறினார்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு விவகாரத்தில், "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா?. வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” என்று தெரிவித்துள்ளார்.