தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி.. சுகமாக இருக்கிறதா? என்று கேலி செய்த நர்சுகள் - உத்தரகாண்டில் அவலம்

சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-02 13:29 IST

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலியுடன் கர்ப்பிணி பெண் ஒருவர் வந்துள்ளார். அவருடன் உறவுக்கார பெண் ஒருவர் மட்டும் உடன் இருந்துள்ளார். அவர்கள் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி மேலும் அதிகமாகிவிட்டது. அந்த பெண்ணுக்கு அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஒரு மறைவான இடத்தைக் கூட அவர்கள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியாததால் கர்ப்பிணி பெண் அங்கேயே தரையில் அமர்ந்து, அந்த இடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்.

அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், “என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?” என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர். இதனிடையே கர்ப்பணி பெண் தரையில் அமர்ந்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தின்போது பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 நர்சுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்