ஆன்லைன் வர்த்தக மோசடி: அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.5 கோடியை இழந்த நிதி நிறுவன மேலாளர்
முதலீடு செய்த பணத்தை செயலியில் இருந்து வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.;
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் தனியார் நிறுவன நிதி மேலாளர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண் சமீபத்தில் பங்கு வர்த்தகம் தொடர்பான வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டது. அந்த குழுவில் பலர் பங்கு வர்த்தகம் மூலம் தங்களுக்கு லாபம் கிடைத்ததாக கூறியிருந்தனர். இந்தநிலையில் அந்த குழுவில் இருந்த ஒருவர் நிதி மேலாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் தாங்கள் கூறும் செயலி மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நிதி மேலாளர் போனில் பேசியவர் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து சிறிய தொகையை முதலீடு செய்தார். அந்த முதலீடுக்கு அதிக லாபம் வந்ததாக செயலியில் காட்டியது.
இதையடுத்து நிதி மேலாளர் சுமார் ரூ.5 கோடி வரை முதலீடு செய்தார். முதலீடு செய்த பணத்தை செயலியில் இருந்து வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது அவரால் முடியவில்லை. அப்போது தான் போலி செயலி மூலம் தான் ஏமாற்றப்பட்டதை நிதி மேலாளர் உணர்ந்தார்.
இதையடுத்து அவர் மோசடி குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன நிதி மேலாளரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.