எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-04-01 13:25 IST

புதுடெல்லி,

ரம்ஜான் விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில், மக்களவை இன்று காலை கூடியதும், திரிணாமுல் காங்கிரசார் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் பல்வேறு விவகாரங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், அவர்கள் என்ன விசயங்களை வலியுறுத்தினர் என்பது உடனடியாக வெளியிடப்படவில்லை. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் மையத்தில் இருந்த உறுப்பினர்களை அவர்களுடைய இருக்கைக்கு செல்லும்படி கூறினார்.

இதேபோன்று, சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் பெயரை குறிப்பிட்ட ஓம் பிர்லா, நேரமில்லா நேரத்தின்போது அவையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அகிலேஷ் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தொடர்ந்து கூறினார்.

ஆனால், உறுப்பினர்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல், கோஷங்களை எழுப்பியபடியும், வாசகங்கள் எழுதப்பட்ட பலகைகளை உயர்த்தி பிடித்தபடியும் அமளில் ஈடுபட்டனர்.

விதிகளின்படி அவையில் இதற்கு இடமில்லை. இதனை சபாநாயகர் வலியுறுத்தி கூறினார். இதனை தொடர்ந்து, நேரமில்லா நேரத்திற்கான அவை நடவடிக்கைகள் தொடங்கிய 5 நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்