பிரதமர் மோடி 'அல்லா' கொடுத்த பரிசு: கர்நாடகாவில் முஸ்லிம் முதியவர் பாராட்டு
பெங்களூரு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3 ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிலையில் அவரை வழிநெடுகிலும் நின்று ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்ததுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை பார்க்க சாளுக்கியா சர்க்கிளில் சிவாஜிநகரை சேர்ந்த முதியவரான முகமது கவுஸ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி காத்து நின்றார்.
அதன்பின்னர் முகமது கவுஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியை பார்க்க வந்துள்ளேன். இதற்கு முன்பு 3 முறை அவரை பார்த்துள்ளேன். ஒருமுறை விதானசவுதா முன்பாக கை கொடுக்கும் தூரத்தில் பிரதமர் மோடியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதனை மறக்கவே முடியாது. நான் பா.ஜனதா கட்சியின் தொண்டன். நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.
பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நாட்டுக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை. அவா் சக்தி மான் போன்றவர். அல்லா கொடுத்த பரிசு பிரதமர் மோடி ஆவார். இதனை தைரியமாக சொல்வேன். பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.