பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டு புதிய உத்தரவு
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
பிரதமர் மோடி, டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியில் 1978-ம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான ஆதாரங்களை அளிக்க உத்தரவிடக்கோரி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நீரஜ் என்பவர் மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். அதை ஏற்று, 1978-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பதிவேடுகளை வெளியிடுமாறும், அவற்றை பார்க்க மனுதாரரை அனுமதிக்குமாறும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து, டெல்லி பல்கலைக்கழகம் உள்பட 6 பேர் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த ஒற்றை நீதிபதி, உயர் பதவியில் இருப்பதாலேயே பிரதமரின் தனிப்பட்ட தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கூறி, கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
ஒற்றை நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டு அமர்வில் நீரஜ், ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய்சிங், வக்கீல் முகமது இர்ஷாத் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்வதற்கு தாமதம் ஆனதற்கு மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள், டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி துஷார் ராவ் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மேல்முறையீடு செய்ய தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கோரும் மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் ஆட்சேபனையை சமர்ப்பிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். டெல்லி பல்கலைக்கழகம் ஆட்சேபனை தாக்கல் செய்த பிறகு, அதற்கு மனுதாரர்கள் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.