ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சாலையில் பின்னால் வந்த ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சதாசிவநகர் அருகே வசித்து வருபவர் வினீத் (வயது 33). இவரது மனைவி அங்கீதா பட்டீல் (31). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி வினீத் தனது மனைவி, மகனுடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஸ்கூட்டரை அங்கீதா ஓட்டினார். நியூ பி.இ.எல். ரோட்டில் 3 பேரும் ஸ்கூட்டரில் சென்றனர்.
அப்போது அதே சாலையில் பின்னால் வந்த ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், வினீத், அங்கீதாவுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர்களது மகன் லேசான காயத்துடன் உயர் தப்பினான். வினீத், அங்கீதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். வினீத்துக்கு மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சதாசிவநகர் போக்குவரத்து போலீசில் அங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கீதாவின் ஸ்கூட்டர் மீது அந்த கார் வேண்டும் என்றே மோதியதும், காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்றதும் தெரியவந்தது.
அதேநேரத்தில் அதிவேகமாக காரை ஓட்டியதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, தம்பதியை கொல்ல முயன்றதாக கொடிகேஹள்ளியை சேர்ந்த சுக்ருத் கவுடா (23) என்பவர் கைது செய்யப்பட்டார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.