போலீஸ்காரர்கள் பாலியல் துன்புறுத்தல்... உள்ளங்கையில் குறிப்பு எழுதிவைத்து அரசு பெண் டாக்டர் தற்கொலை

உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் டாக்டர் எழுதி வைத்துள்ளார்.;

Update:2025-10-24 15:24 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று இரவு பல்தான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், பெண் டாக்டரின் கையில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பெண் டாக்டர் தனது உள்ளங்கையில் அந்த குறிப்பை எழுதிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதில், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் காவலர் பிரசாந்த் பங்கர் ஆகிய இருவரும் கடந்த 5 மாதங்களாக தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்து வந்ததாகவும், உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் பெண் டாக்டர் எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்கள் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். இது குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி ரூபாலி சகாங்கர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதாரா மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரையும் தப்ப விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்