வயநாடு எம்.பி. பிரியங்காவை காணவில்லை: போலீசில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு

கடந்த 3 மாதங்களாக பிரியங்கா காந்தியை காணவில்லை என்று வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.;

Update:2025-08-12 07:01 IST

கோப்புப்படம்

வயநாடு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. இவர் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை என்று வயநாடு மாவட்ட பா.ஜனதா பட்டியல் மோா்ச்சா தலைவர் முகுந்தன் பள்ளியரா வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரில், ‘பிரியங்கா காந்தி கடந்த மூன்று மாதங்களாக மாவட்டத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற வயநாடு சூரல்மாலாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவின் போது அவர் காணாமல் போயுள்ளார். இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிலும் அவரை காணவில்லை. மாநிலத்திலேயே வயநாட்டில் தான் அதிக பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். ஆனால், பழங்குடி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எம்.பியின் இருப்பு இல்லை. எனவே, இந்த புகாரை ஏற்று காணாமல் போன எம்.பியைக் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மத்திய மந்திரி சுரேஷ் கோபியை காணவில்லை என்று திருச்சூர் போலீசில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு புகார் கொடுத்திருந்தது. அந்த புகாரில், ‘கடந்த இரண்டு மாதங்களாக, திருச்சூரில் நடைபெறும் எந்த நிகழ்வுகளிலும் எம்.பி.யை முற்றிலும் காணவில்லை. மேயர் மற்றும் வருவாய் அமைச்சர் கூட அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுரேஷ் கோபியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் எங்கிருக்கிறார் என்றோ திரும்பிய தேதி குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்