நாடாளுமன்றத்தில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் நாளை கூட இருக்கிறது.;

Update:2025-07-20 21:26 IST

FILEPIC

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. ரக்ஷா பந்தன், சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இடையில் ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நாடாளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படும்.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. ஆனால், சிறப்பு கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழலில் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட அலுவல்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோதாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 18-வது மக்களவையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதல் நாள் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்