ஈரானில் போராட்டம்; அவசர அவசரமாக வெளியேறும் இந்தியர்கள்
ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Image Courtesy : ANI
புதுடெல்லி,
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 2,572 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதனிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ஈரானில் 9,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஈரானில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஈரானில் இருந்து ஏராளமான இந்தியர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு வந்திறங்கிய விமானங்களில், ஈரானில் இருந்து மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். ஈரானில் தங்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை என அவர்கள் கூறினர்.
அதே சமயம், அங்கு இணையதளம் முடங்கியதால் செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டதாகவும் நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.