பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய தடை விதித்த கிராமம்: எங்கு தெரியுமா..?
காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
மொகாலி,
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சண்டிகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீப் கிராம சபையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டு, அதை கடந்த மாதம் 31-ம் தேதி நிறைவேற்றியநிலையில் இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
மனக்பூர் ஷெரீப் கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வரும்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி, திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பான அந்த தீர்மானத்தில், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும், தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவரான தல்வீர் சிங் கூறுகையில், "இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை இது. நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த காதல் திருமண தடை தீர்மானத்துக்கு பெரும்பாலான கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாகவும், தங்கள் வழியை மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் மனக்பூர் ஷெரீப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.