‘ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஹைட்ரஜன் குண்டு அல்ல, சிறிய பட்டாசு’ - தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-11-06 13:54 IST

மும்பை,

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக நேற்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இது தொடர்பாக ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் பல்வேறு ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன.

பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் (அவரின் புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டார்) ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது. மாநிலத்தில் 25 லட்சம் போலி வாக்காளர் பதிவுகளில் இவர் ஒருவர். இது ஒரு மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டுக்கான சான்றாகும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்டுகள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஹைட்ரஜன் குண்டு அல்ல, உண்மையில் அது வெறும் சிறிய பட்டாசு. ராகுல் காந்தி செயல்கள் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுவதை விரும்பாத சர்வதேச சக்திகளைப் போலவே இருக்கின்றன. அந்த சர்வதேச சக்திகள் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அகற்ற முயற்சிக்கின்றன. ராகுல் காந்தியும் அதையே செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்