கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்; 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் 22-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டுள்ளது.;

Update:2025-07-19 09:03 IST

திருவனந்தபுரம்,

நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையை அடுத்து, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

கோழிக்கோட்டின் வடகரை தாலுகாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

கடந்த 15-ந்தேதி முதல் வடக்கு கேரளாவில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அது இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, கேரளாவில் கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மாவட்டங்களுக்கும் நாளை ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கேரளாவில் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழையால் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மீனவர்கள் 22-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்