இந்தியாவிலேயே முதல் பணக்கார முதல்-மந்திரி யார்..? கடைசி இடத்தில் இருப்பவர் இவரா..?

அனைத்தும் தேர்தலின்போது பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்ததின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-08-24 07:56 IST

புதுடெல்லி,

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டு தோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சந்திரபாபுநாயுடு

அந்த பட்டியலின்படி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, ரூ.931 கோடி சொத்து மதிப்புகளுடன் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனமாகும்.

கடந்த 1992-ம் ஆண்டு ரூ.1 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடனும் ரூ.7 ஆயிரம் செலுத்தப்பட்ட மூலதனத்துடனும் அவர் தொடங்கிய அந்த நிறுவனம் தற்போது பல இடங்களில் கிளைகளை பரப்பி, விரிவடைந்து ரூ.931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபுநாயுடுவின் குடும்பத்தினரிடம் உள்ளது. இதில் சந்திரபாபுநாயுடு பெயரில் எந்த சொத்தும் இல்லை என்றாலும் அவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகள் உள்ளன. அந்த பங்குகள் சந்திரபாபுநாயுடுக்கு சொந்தமானதாகவே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் நாரா (சந்திரபாபுநாயுடு குடும்ப பெயர்) குடும்பத்தினர் மொத்தம் 41.3 சதவீதத்தை வைத்துள்ளனர். இதன் மதிப்பு 1995-ம் ஆண்டு ரூ.25 கோடியாக இருந்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. அதிகபட்சமாக 1,81,907 பங்குதாரர்களை கொண்டுள்ளது.

பெமா காண்டு

அருணாச்சலப் பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு ரூ.332 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைச் சொந்தமாகக் கொண்டு, நாட்டின் இரண்டாவது பணக்கார முதல்-மந்திரியாக பதிவாகியுள்ளார். பெமா காண்டுவின் கணிசமான சொத்துக்கள் மற்றும் வணிக நலன்கள் முதல் இரண்டு பணக்கார முதல்-மந்திரிகளில் அவரது பெயரை இடம் பெற செய்துள்ளன. சந்திர பாபு நாயுடு மற்றும் பெமா காண்டு இருவரும் கோடீஸ்வர முதல்-மந்திரிகள் ஆவர்.

சித்தராமையா

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ரூ.51 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாயுடு மற்றும் காண்டுவின் சொத்துக்களை விட அவரது சொத்துக்கள் கணிசமாகக் குறைவாக இருந்தாலும், அவர் பல இந்திய முதல்-மந்திரிகளை விட செல்வந்தராகவே இருக்கிறார்.

மம்தா பானர்ஜி

ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள பட்டியலில் கடைசி வரிசையில் வெறும் ரூ.15.38 லட்சம் சொத்துக்களுடன் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார். அவர்தான் மிகவும் வசதி குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்னதாக அடுத்தடுத்த இடத்தில் ஜம்மு & காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா (ரூ.55.24 லட்சம்) மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் (ரூ.1.18 கோடி) ஆகியோர் உள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேர்தலின்போது பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்ததின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்