மூதாட்டியை கொன்று சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்
கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாடான் மாவட்டம் மவுசம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கவுசிக் சிங். இவர் ஹம்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கவுசிக் சிங்கின் தாயார் ரத்தன் ராணி (வயது 70). இவர் மவுசம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், மவுசம்பூரில் உள்ள கவுசிக்கின் வீட்டிற்குள் நேற்று இரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வீட்டில் கவுசிக்கின் தாயாரான மூதாட்டி ரத்தன் ராணி தனியே தூங்கியுள்ளார். வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை அறிந்த மூதாட்டி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ரத்தன் ராணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டியை கொன்றுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடுத்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.