போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பமேளாவிற்கு படகில் பயணம் செய்த வாலிபர்கள்

மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-02-18 08:18 IST

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த மாதம் (ஜனவரி) தொடங்கி நடந்து வருகிறது. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதனால் அங்கு கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்கு அதிக மக்கள் படையெடுப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள கம்ஹாரியா கிராமத்தைச் சேர்ந்த 7 வாலிபர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூலம் பீகாரில் இருந்து பிரயாக்ராஜ் சென்றனர். கடந்த 11-ம் தேதி தங்கள் பயணத்தை தொடங்கி 13-ம் தேதி பிரயாக்ராஜ் சென்றடைந்தனர். 550 கி.மீ தூரம் 3 நாட்கள் படகில் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக படகில் சென்ற ஒருவர் கூறுகையில், 3 நாட்கள் பயணத்தின்போது படகில் எஞ்சின் பழுதடைந்தால், அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு எஞ்சினையும் வைத்திருந்தோம். 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர், அடுப்பு, 20 லிட்டர் பெட்ரோல், காய்கறிகள், அரிசி, மாவு, போர்வைகள் மற்றும் மெத்தைகள் படகிலேயே வைத்திருந்தோம். குழுவினர் அனைவரும் படகை மாறி மாறி இயக்கினோம்" என்று மனு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்