தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் மோசமான நிலையைப் பற்றி தீர்ப்பாயம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.;
கர்நாடகா,
தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதாக எழுந்த புகார் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து இந்த வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. பெங்களூருவிலிருந்து வரும் நீர், குறிப்பாக பெல்லந்தூர் மற்றும் வரத்தூர் ஏரிகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், ஆற்றில் கலந்து தமிழகத்தில் கடும் மாசுகளை உருவாக்குகிறது.
ஆற்றின் நீர் கருமையாக மாறி உள்ளது, நுரை பொங்குகிறது, மேலும் துர்நாற்றமும் வீசுவதாகப் புகார்கள் வந்துள்ளன. ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கட்டில் நுரை பொங்குதல், ஆகாயத்தாமரை வளர்ச்சி மற்றும் பாசனக் குளங்கள் மாசுபடுவது போன்றவற்றை தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் உறுப்பினர் சத்யகோபால் கொர்லபதி அடங்கிய அமர்வு, புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கும் வரை காத்திருக்காமல், இடைக்கால மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மேலும் தாமதித்தால் நிலைமை மோசமடையும் என்றும் எச்சரித்தது.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளைக் கையாள அமைக்கப்பட்ட மத்திய பேச்சுவார்த்தைக் குழு, ஜூன் 2024-ல் மாசுபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, கருப்பு, நுரை படிந்த நீர் மற்றும் கடுமையான துர்நாற்றம் இருப்பதை உறுதி செய்தது. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பெங்களூருவைச் சுற்றியுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளை மாசுபடுத்துவதையும் குழு கண்டறிந்தது.
இந்த நிலையில், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கோரிய நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 21 அன்று ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினத்திற்குள் தென்பெண்ணை ஆற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான குறுகிய கால நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.