பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அண்மைக்காலமாக கட்சி மேலிடத்தின் நிலைப்பாட்டிற்கு முரண்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.;
புதுடெல்லி,
மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா முன்மொழிந்தார்.
இதில் அரசியலமைப்பு மசோதாவில் அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் தொடர்ச்சியாக 30 நாள்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பபடும் என்றும் அந்தக்குழு அடுத்த கூட்டத்தொடருக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யும் எனவும் அமித்ஷா கூறினார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “30 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொதுஅறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறாக எதுவும் தெரியவில்லை. இந்த மசோதாவை ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான்.
குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆகையால், விவாதத்தை நடத்துவோம்” என்று தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் உள்பட பல்வேறு விவகாரங்களில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அவ்வப்போது கட்சி மற்றும் கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.