கேரள கடற்கரை அருகே தீப்பிடித்த கப்பல்; கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடற்கரைக்கு வந்து சேர்ந்தால் அவற்றை தொடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-14 20:35 IST

திருவனந்தபுரம்,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி கடந்த 9-ந்தேதி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

அந்த தீ மளமளவென பரவி கன்டெய்னர்களுக்கும் தீப்பற்றி எரிந்ததால், அந்த கண்டெய்னர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் தெற்கு பகுதியிலும், ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டத்தின் கடற்கரையிலும் கரை ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலோர பகுதியில் ஏதேனும் பொருட்கள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 112 என்ற எண்ணை அழைத்து பொருளின் இருப்பிடத்தை தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் வரும் 16-ந்தேதி முதல் கரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடற்கரைக்கு வந்து சேர்ந்தால் அவற்றை தொடக்கூடாது என்றும், அந்த பொருட்களிடம் இருந்து 200 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள கடற்கரை பகுதிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்