ஹனிமூன் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. கணவன் கொலையை ரசித்து பார்த்த இளம்பெண்

ஹனிமூன் கொலையில் தோண்டத்தோண்ட கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.;

Update:2025-06-12 06:53 IST

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார். புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20-ந்தேதி மேகாலயா சென்றுள்ளனர். மேகாலயாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த தம்பதி, அங்குள்ள நொங்ரியாட் என்ற கிராமத்தில் தங்கிய நிலையில், 23-ந்தேதிக்கு பிறகு இருவரும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து மேகாலயா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தம்பதி கடைசியாக தங்கிய கிராமத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில், கடந்த 2-ந்தேதி ராஜாவின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் சோனம் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காஜிப்பூரில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த சோனம், அங்குள்ள போலீசில் சரண் அடைந்தார். அப்போதுதான் ராஜா ரகுவன்ஷியை அவரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடைய காதலன் ராஜ் குஷ்வாகா (21), கூலிப்படையாக செயல்பட்ட விஷால் (22), ஆனந்த் (23), ஆகாஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்துக்கு முன் சோனம், தனது நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்த ராஜ் குஷ்வாகாவை காதலித்துள்ளார். ஆனால் சோனத்தின் பெற்றோர், தொழில் அதிபரான ராஜா ரகுவன்ஷிக்கு சோனத்தை திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், காதலனை கைவிட முடியாததாலும் அப்பாவியான தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார் என்ற விவரம் தெரியவந்தது.

இந்த கொலையில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், கொள்ளையர்கள் பணத்துக்காக தனது கணவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களிடம் இருந்து நான் தப்பி வாரணாசிக்கு வந்தேன் என்றும் முதலில் கூறிவந்த சோனம், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்தார்.

இதேபோல் கைது செய்யப்பட்டுள்ள கூலிப்படையினரும் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கொடுத்த வாக்குமூலத்தை பார்த்தால் சினிமாவில் வரும் காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

சோனத்தின் குடும்பம் நல்ல வசதி படைத்தது. அவருடைய தந்தையும் தொழில் அதிபர். அவர் நடத்தி வந்த நிறுவனத்தை மகள் சோனத்திடம் ஒப்படைத்தார். அதே நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்தவர் ராஜ் குஷ்வாகா. உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

தந்தையின் மரணத்துக்கு பின்னர் தாய் மற்றும் 3 சகோதரிகளுடன் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் குடியேறினர். ராஜ் குஷ்வாகா சோனத்தைவிட 3 வயது இளையவர். இருப்பினும் இருவரும் காதலித்து வந்தனர்.

தனது காதல் குறித்து தாயிடம் சோனம் கூறினார். இதையடுத்துதான் ராஜா ரகுவன்ஷியுடன் சோனத்துக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்த திருமணத்துக்கு சோனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'என் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைத்தால் நான் என்ன செய்வேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்' என்று மிரட்டியுள்ளார்.

இதைப்பொருட்படுத்தாத சோனத்தின் தாய், காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று திருமணத்தை நடத்திவிட்டனர். திருமணம் முடிந்தபின்னர் சோனத்தின் மனம் அதனை ஏற்கவில்லை. காதலனை எப்படியும் கைப்பிடித்துவிட வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தார். அதற்கு இடையூறாக ராஜா ரகுவன்ஷி வந்துவிட்டார் என்பதால் அவர் மீது சோனத்துக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அவரை தீர்த்துக்கட்டவும் துணிந்தார்.

ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், தேனிலவுக்கு ஏற்பாடு செய்தார். அதற்கான இடத்தையும் அவரே தேர்ந்து எடுத்தார். இதனிடையே ராஜ் குஷ்வாகாவிடம் பேசி, தனது கணவரை தேனிலவு செல்லும் இடத்தில்வைத்து தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏற்பாடு செய்ய கூறினார்.

முதலில் கூலிப்படைக்கு ரூ.14 லட்சம் பேசினார். முன்பணமாக சில லட்சங்களையும் கொடுத்தார். ஆனால கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், கூலிப்படையினர் தயங்கவே, அவர்களுக்கு ரூ.20 லட்சம் தருவதாக கூறி, கொலையை அரங்கேற்றினார்.

கொலை நடந்த அன்று சிரபுஞ்சி அருவிப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிக்கு கணவரை அழைத்து சென்றார் சோனம். அங்கு அவர்களை பின்தொடர்ந்து வந்த விஷால் உள்ளிட்டோர், கோடரியால் ராஜா ரகுவன்ஷியை வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததும், அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்த சோனம், அதை கூலிப்படைக்கு கொடுத்தார். பின்னர் அவர் அணிந்த நகைகளையும் கூலிப்படையினர் எடுத்துக்கொண்டனர்.

இவ்வாறு வெளியில் சிரித்தும், உள்ளுக்குள் வஞ்சகத்துடன் இருந்த சோனம், தனது காதலுக்காக ஒரு அப்பாவியை கொலை செய்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீசில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கணவன் கொலை செய்யப்படுவதை நேரில் மனைவி ரசித்து பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே இந்த கொலை எப்படி நடந்தது என்பதை அறிய, சம்பவம் நடந்த இடத்துக்கு சோனத்தை அழைத்துச் சென்று நடிக்க வைத்து காட்ட முடிவு செய்துள்ளனர். அதற்காக அவரை காவலில் எடுக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய அவருக்கு மருத்துவப்பரிசோதனையும் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குஷ்வாகா, விஷால், ஆனந்த், ஆகாஷ் ஆகியோர் நேற்று ஷில்லாங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

கொலை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட சோனம்

தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடந்தது என்பதற்காக, ஒரு பாவமும் அறியாத தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இந்த சதித்திட்டம் அனைத்துக்கும் மூளையாக இருந்தது சோனம்தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே, தனது காதலன் ராஜ் குஷ்வாகாவுடன் தொடர்ந்து பேசி தனது திட்டத்தை கூறியுள்ளார்.

இதை நிறைவேற்ற கூலிப்படையை ஏற்பாடு செய்யும்படி கூறி, அவர்களுக்கு கூலியை நிர்ணயம் செய்ததும் சோனம்தான். அதே போல் தனது காதலன் ராஜ் குஷ்வாகா மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்துள்ளார். கொலை நடக்கும் இடத்துக்கு அவர் வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

கூலிப்படையினரை மட்டும் அவர் புறப்பட்ட அன்றே ரெயிலில், சோஹ்ராவுக்கு வரவழைத்துள்ளார். கூலிப்படையினராக விஷால், ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் சிரபுஞ்சியில் வைத்து சுற்றுலா பயணிகள் போல் ராஜா ரகுவன்ஷிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

சோஹ்ராவில் புதுமணத்தம்பதி தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகம், அவர்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொடுத்தது. தினமும் அவர் அவர்களுடன் சென்று வந்தார். ஆனால் சம்பவத்தன்று அவரை சோனம் தவிர்த்துள்ளார். மேலும் தேனிலவு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த அவர், திரும்பி வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. இவை எல்லாம் அவர் முன்பே திட்டமிட்டு உள்ளார் என்பதற்கு சான்றாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்