சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது; காங். மூத்த எம்.எல்.ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு
சோனியா காந்தியிடம் சித்தராமையாவை அறிமுகம் செய்தது நான் தான் என்று காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ கூறியுள்ளார் .;
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னர், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களைச் சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி முடிந்துள்ள நிலையில், தற்போது முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது. "கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும்" என அண்மையில் கூட்டுறவுத் துறை மந்திரி ராஜண்ணா கூறியிருந்தார்.
இந்நிலையில், சிவக்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், "கர்நாடகாவின் முதல் மந்திரி இன்னும் 2 முதல் 3 மாதங்களில் டி.கே. சிவக்குமார் பதவியேற்க வாய்ப்புள்ளது" எனக் கூறியிருந்தார். ஆனால், சித்தராமையா தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தைப் பூர்த்தி செய்வார் என அவரது மகன் யதீந்திரா கூறியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தச் சலசலப்பைச் சரி செய்ய சித்தராமையா தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வான எம்.ஆர். பாட்டீல் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் கூறுகையில், "சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது. சோனியா காந்தியிடம் நான் தான் சித்தராமையாவை அறிமுகம் செய்தேன். அவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்துள்ளது. முதலமைச்சராகிவிட்டார். எனக்கு காட் ஃபாதர் யாரும் இல்லை. சுர்ஜேவாலாவைச் சந்தித்து இருக்கிறேன். அனைத்தையும் கூறியுள்ளேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போதைக்கு முதலமைச்சர் மாற்றம் குறித்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறிய நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ. பேசும் காட்சிகள் வெளியாகி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.