அசாமிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.;
கோப்புப்படம்
திஸ்பூர்,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) என்பது வாக்காளர் பட்டியலை புதுப்பித்து, புதிய வாக்காளர்களை சேர்த்து, இடமாற்றம் செய்தவர்களின் தகவல்களை திருத்தி, உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வது ஆகும். இது ஜனநாயக அமைப்பில் முக்கியமான நிர்வாக நடவடிக்கை ஆகும். ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் சரியாக பதிவாகியுள்ளதா, முகவரி மாற்றம், வயது சரிசெய்தல் போன்ற விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், விரைவாக எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக்கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் இந்த பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள், டிசம்பர் 4-ந்தேதி நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், அசாமில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார். மேலும், தேர்தல் பணியை வெளிப்படையாகவும், சரியான நேரத்திலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.