நிலைமை கட்டுக்குள் உள்ளது; இந்தியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஈரான் தூதர்
போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளை இந்தியர்கள் தவிர்க்கும்படியும், செய்திகளை உன்னிப்பாக கவனிக்கும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவை மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. ஒருபுறம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், வன்முறை, போராட்டத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இதன்படி, ஒரு வாரத்தில் 16 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கும்படியும், செய்திகளை உன்னிப்பாக கவனிக்கும்படியும், வலைதளங்களை பார்க்கும்படியும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக வலைதள பதிவுகளை காணும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுபற்றி இந்தியாவுக்கான இந்திய தூதர் முகமது பதாலி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஈரானில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்திய குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறினார்.
இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன்களின் பாதுகாப்புக்கு, ஈரான் அரசு என்ன வகையான உத்தரவாதம் வழங்க முடியும் என கேட்கப்பட்டதற்கு அவர் பதிலாக இதனை கூறியுள்ளார்.