பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் - அஸ்வினி வைஷ்ணவ்
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களுக்கு அந்த வலைதளங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
கடந்த 29-ந் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக வலைதளங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது. அதில், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஆபாசமான, அநாகரிக, சட்டவிரோத உள்ளடக்கங்கள் மீது அவை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் இதர உள்ளடக்கங்களுக்கு அந்த வலைதளங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு அவற்றையே பொறுப்பேற்கச் செய்ய கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.