நோய்வாய்ப்பட்ட தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து, குடும்பத்துடன் கும்பமேளாவுக்கு சென்ற மகன்
நோய்வாய்ப்பட்ட தனது தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த மகன், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்குச் சென்ற சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது.;
ராம்கர்,
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகிலேஷ் குமார். மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உடல்நிலை சரியில்லாத தாயுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு புனித நீராட அகிலேஷ் குமார் முடிவெடுத்தார். இதற்காக கடந்த திங்கட்கிழமை, நோய்வாய்ப்பட்ட தனது தாயை வீட்டுக்குள்ளேயே பூட்டிய அகிலேஷ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உத்தரபிரதேசம் புறப்பட்டார். அப்போது தாய்க்கு அகிலேஷ் குமார் உணவு ஏதும் வழங்காமலும், வீட்டிலும் உணவு வைக்காமலும் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக உணவு ஏதும் இன்றி தவித்த அந்த 65 வயது மூதாட்டி, பசியால் உதவி கேட்டு அழுதுள்ளார். மூதாட்டின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து அவரது மகளிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். மூதாட்டியின் மகள், உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டில் இருந்த மூதாட்டியை மீட்டனர்.
தொடர்ந்து மூதாட்டி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் அகிலேஷ் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, தனது தாய்க்கு உணவு மற்றும் குடிநீர் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகே தான் கும்பமேளாவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தனது நோய்வாய்ப்பட்ட தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.