காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் மற்றும் கார்கே கடிதம் எழுதி உள்ளனர்.;

Update:2025-07-17 06:30 IST

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைந்த பகுதி, சட்டசபை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உள்ளன. இதில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இதில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களான அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மாநில அந்தஸ்து கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கை நியாயமானது மற்றும் அவர்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் உறுதியாக வேரூன்றியுள்ளது.கடந்த காலங்களில் பல யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ள நிலையில், காஷ்மீர் நிலையோ சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாதது ஆகும். ஏனெனில் முதல் முறையாக முழு அளவிலான மாநிலம் ஒன்று யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கப்பட்டது.

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்குதற்கான அரசின் உறுதிப்பாட்டை நீங்கள் பல சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி இருக்கிறீர்கள்.2024-ம் ஆண்டு மே 19-ந் தேதி புவனேஸ்வரில் நீங்கள் அளித்த பேட்டியில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் அளித்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறோம்' என கூறியிருந்தீர்கள்.பின்னர் ஸ்ரீநகரில் செப்டம்பர் 19-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மீண்டும் அதை உறுதிப்படுத்தினீர்கள். இந்த பிராந்தியத்தின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம் என நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதாக குறிப்பிட்டீர்கள்.இதே வாக்குறுதிகளை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டிலும் வழங்கி இருக்கிறது. காஷ்மீருக்கு கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்கும் சட்டமும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது லடாக் மக்களின் உரிமைகள், நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதுடன், அவர்களின் கலாசாரம், வளர்ச்சி மற்றும் அரசியல் விருப்பங்களை நிவர்த்தி செய்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும். இவ்வாறு ராகுல் மற்றும் கார்கே கூட்டாக அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்